வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி பணிகளை அமைச்சர் சந்திரசேகர் ஆய்வு

வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி பணிகள்

வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி பணிகளை அமைச்சர் சந்திரசேகர் ஆய்வு
வாழைச்சேனை துறைமுக அபிவிருத்தி பணிகளை அமைச்சர் சந்திரசேகர் ஆய்வு

கிழக்கு மாகாணத்தின் கடற்றொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையான முறையில் மேம்படுத்துவதற்காக ரூ.1300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.400 மில்லியன் செலவில் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துறைமுக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையை நேரில் பார்வையிட்ட கடறொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்புகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

இதன்போது மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், துறைமுகத்தின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மீனவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் மாற்றுவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தியதுடன், நாட்டின் கடற்றொழில் துறையை நவீனப்படுத்தி துறைமுகங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக வாழைச்சேனை மீனவர்கள் எதிர்பார்த்து வந்த இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய மாற்றங்களை உருவாக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.