இரண்டு மணி நேர மின் வெட்டு திடீர் கோளாறே — திட்டமிட்டதல்ல என அமைச்சர் தெளிவுபடுத்தல்
இரண்டு மணி நேர மின் வெட்டு திடீர் கோளாறே
இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்படும் மின் துண்டிப்புகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பினார். கொழும்பு உள்பட நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு முன் அறிவிப்பின்றி இரண்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, தற்போது நாட்டில் திட்டமிட்ட மின்வெட்டு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். மின் விநியோகக் கட்டமைப்பில் அவ்வப்போது ஏற்படும் திடீர் தொழில்நுட்பக் கோளாறுகளே இந்த மின் துண்டிப்புகளுக்குக் காரணம் என்றும், இவை உடனடியாகச் சீர்செய்யப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார். திட்டமிட்ட மின்வெட்டு தேவைப்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும், எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இக்கேள்விகளை எழுப்புவதாகவும் அமைச்சர் சாடினார்.
மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், இவ்வாறான திடீர் மின் துண்டிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி சபையில் மேலும் சுட்டிக்காட்டினார்.
Editor