அமைச்சர்கள் எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்தனர் – அரசின் முன்னுதாரண முடிவு

அமைச்சர்கள் எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்தனர்

அமைச்சர்கள் எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்தனர் – அரசின் முன்னுதாரண முடிவு
அமைச்சர் பேராசிரியர் சந்தன

நாட்டில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு, அனைத்து அமைச்சர்களும் மற்றும் பிரதி அமைச்சர்களும் தங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக தாமாக முன்வந்து குறைத்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, நாட்டிற்கும் மக்களுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்ற நோக்கில், அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர்களின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அமைச்சகச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தங்களது எரிபொருள் பயன்பாட்டை கணிசமான அளவில் குறைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மின்சாரத்தை சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக, அதிக மின்சாரம் பயன்படுத்தப்படும் நேரங்களான மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சார பயன்பாட்டை தவிர்த்து, அந்த நேரங்களுக்கு வெளியே பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.