பரபரப்பான வித்யா கொலை வழக்கு: நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி!

இலங்கையில் பரபரப்பான வித்யா கொலை வழக்கு

பரபரப்பான வித்யா கொலை வழக்கு: நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி!

யாழ்ப்பானம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது இளம்பெண் 2015ம் ஆண்டு கடத்தப்பட்டு, கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (மே 6) முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்னர், நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'சுவிஸ் குமார்' என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ஒருமனதாக உறுதிப்படுத்தியது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது என்றும், அறிவியல் சான்றுகள் மற்றும் வாய்மொழி சாட்சியங்கள் மூலம் குற்றவாளிகளின் குற்றம் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் அவதானித்தது. இந்தக் கொடூரமான குற்றம் சமூகத்தில் ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தின் தண்டனையை மாற்றியமைக்க எந்தவொரு சட்டரீதியான அடிப்படையும் இல்லை என்று நீதிபதிகள் குழு ஒருமனதாகத் தெரிவித்தது.

மே 13, 2015 அன்று, பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 18 வயதான வித்யா கடத்தப்பட்டு, கட்டப்பட்டு, மிருகத்தனமாக கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

செப்டம்பர் 27, 2017 அன்று, விசாரணையின் முடிவில், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனையும், கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட ஐந்து பேரின் மீதான குற்றச்சாட்டுகள் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கான மரண தண்டனையையும் பிற சிறைத் தண்டனைகளையும் உறுதி செய்தது. எனினும், மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனக் கண்டறிந்து, அவர்களுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இலங்கையில் மரண தண்டனை சட்டப்படி கட்டாயமானது என்றாலும், 1976 ஆம் ஆண்டு முதல் அது நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்தக் குற்றவாளிகள் பெரும்பாலும் ஆயுள் தண்டனையை எதிர்நோக்குவதற்கே வாய்ப்புள்ளது.