சமூக சக்தி" திட்டம் அரசியல் ஆயுதமல்ல: அமைச்சர் சந்திரசேகர்

சமூக சக்தி" திட்டம் அரசியல் ஆயுதமல்ல

சமூக சக்தி" திட்டம் அரசியல் ஆயுதமல்ல: அமைச்சர் சந்திரசேகர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் "சமூக சக்தி" திட்டம் எந்தவொரு கட்சியையும் வலுப்படுத்தும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படவில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெளிவுபடுத்தினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

"சமூக சக்தி" திட்டம் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் இந்த விளக்கத்தை வழங்கினார்.

இத்திட்டம் வறுமை ஒழிப்பு, சுயதொழில் மேம்பாடு மற்றும் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார். சமூகத்தில் பின்தங்கிய தரப்பினருக்கு நேரடி பலன் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் மீன்வளத் துறை மேம்பாடு, குடிநீர் வசதி, வீதி அமைப்பு, விவசாயம் மற்றும் இளைஞர் தொழில் வாய்ப்புகள் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படும் எனஅவர் குறிப்பிட்டார்.

மேலும், எல்லா விடயங்களிலும் எதிர்ப்பு அரசியல் நடத்தும் போக்கிலிருந்து விலகி, வறுமை ஒழிப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்ற பொதுநல விடயங்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு அமைச்சர் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

வடக்கு மாகாணத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.