எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவுடன் இலங்கை அவசர பேச்சு

எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவுடன்

எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவுடன் இலங்கை அவசர பேச்சு

மத்திய கிழக்கில் நிலவும் ஈரான்-இஸ்ரேல் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைக்கு மாற்று ஏற்பாடாக, இலங்கை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்வது குறித்து இன்று(13)பிற்பகல் வெளியுறவு அமைச்சில் அவசர கலந்துரையாடல் நடைபெற்றது.(

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் கலந்து கொண்டார். நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சர் அனில் ஜெயந்த, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்கா விதித்திருந்த தடையை 30 நாட்களுக்கு தளர்த்தியுள்ளது இந்த முயற்சிக்கு வழிவகுத்துள்ளது.இலங்கையின் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதாகவும், தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தூதர் உறுதியளித்தார். இலங்கைக்கு எப்போது ஆதரவு தேவைப்பட்டாலும் ரஷ்யா வழங்கும் என்றும் வலியுறுத்தினார்.

 ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படும் அச்சம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை மற்றும் விநியோகத்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உறுதிப்படுத்தல்படி, தற்போது 33 நாட்களுக்கான டீசல், 28 நாட்களுக்கான பெட்ரோல் இருப்பு உள்ளது. விரைவில் வரவுள்ள கப்பல்களால் பெட்ரோல் இருப்பு 40 நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நெருக்கடி நீடித்தால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகள் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த முயற்சி, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.