சுரேஷ் சாலே கைது: ஒரு விமர்சனப் பார்வை
சுரேஷ் சாலே கைது
* விடுதலை இறையியல் பிரகாரம் கொழும்பு பேராயர் சிந்திக்கிறாரா?
* ”தேசிய பாதுகாப்பு” என்ற பின்புலத்தில் நோக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள்.
* விசாரணையை தடுக்க அரசியல் செல்வாக்கு பிரயோகிக்கப்படுவதாக பேராயர் இல்லம் குற்றச்சாட்டு.
ஈஸ்டர் எனப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை விவகாரங்களில், இலங்கைக் கத்தோலிக்க திரு அவையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ராஜபக்ச குடும்பம் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டதன் விளைவு தான், பின்னடைவுக்கு காரணம். இதனை ஒரு கட்டத்தில் மல்கம் ரஞ்சித் ஒப்புக் கொண்டார்.
”விடுதலை இறையியல்” (Liberation Theology) என்பதன் பிரகாரம் போராயர் மல்கம் ரஞ்சித் சிந்தித்து செயற்பட்டால், நிச்சயம் இலங்கைத்தீவில் நடைபெற்ற அத்தனை அநீதிகளுக்கும் நியாயமான தீர்வு கிடைக்கும்.
குறிப்பாக, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய விவகாரத்தில் பேராயர் கவனம் செலுத்தவில்லை.
2009 இற்கு முன்னரும் அதன் பின்னரும் வடக்கு கிழக்கில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஆயுதக் குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளை பேராயர் ”இலங்கைத் தேசிய பாதுகாப்பு”என மதிப்பிட்டுக் கொண்டிருந்த பின்னணியில் தான், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்றது.
அன்று முதல், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று, அதாவது ரணில் - மைத்திரி அரசாங்கம் பொறுப்பற்றது என்ற எண்ணக் கருவை உருவாக்கி, ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்ற பிரச்சாரத்தை பகிரங்கமாக முன்னெடுத்தவர் இந்தப் பேராயர்.
குறிப்பாகச் சொல்வதானால் -- முப்பது வருட ஆயுதப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் வெற்றி கொண்டவர் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதாரர்களும் என்ற சிந்தனை உருவாக்கத்தின் பின்னால் மல்கம் ரஞ்சித் இருந்தார்.
இப் பின்னணியில் தான், கோட்டாபய 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஐந்து ஆண்டுகளின் பின்னர் ராஜபக்ச குடும்பம் மீண்டும் பதவிக்கு வந்தபோது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவர், தண்டிக்கப்படுவர் என்று கொழும்பு கத்தோலிக்க திரு அவை திடமாக நம்பியது.
ஆனால் --- பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்று சில மாதங்களின் பின்னர் தான் நிலமையை புரிந்து கொண்டார்.
இந்த அனுபவத்தின் காரணமாகவோ என்னவோ அநுர அரசாங்கத்தின் மீதும், பேராயர் மல்கம் ரஞ்சித் நம்பிக்கை வைக்கவில்லை.
ஆனால், பிரதான சந்தேகநபரான அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சென்ற வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் --பேராயர் இல்ல செய்தித் தொடார்பாளரான அருட்தந்தை சிறில் காமினி, சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், விசாரணைகளை தடுக்க அரசியல் செல்வாக்குகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தினார்.
'கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முற்றாக நிறுத்தப்பட்டன. ரணில் ஜனாதிபதியாக இருந்தபோதும் விசாரணைகள் தொடரவில்லை' என சிறில் காமினி சுட்டிக்காட்டினார்.
விசாரணைகளைத் தடுக்கும் முயற்சிகளுக்கு ஜனாதிபதி அநுர இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சதித்திட்டங்கள் குறித்து பிரித்தானியாவை மையமாக் கொண்ட சனல் 4 தொலைக்காட்சி, ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளராக இருந்த அசாத் மௌலானா வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த விசாரணையின் விளைவாக சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் கைது செய்யப்படுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததாக கத்தோலிக்க திரு அவை, அநுர ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சுட்டிக்காட்டியிருந்தது.
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் கத்தோலிக்க திரு அவை குற்றவாளிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் தெரியாத புதிர் அல்ல.
ஆனால் “தற்போது கைதான “சுரேஷ் சாலே தவறு செய்தாரா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இதுபோன்ற கைதுகளுக்கு அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பல்வேறு விளக்கங்களை வழங்கவோ தேவையில்லை” என கொழும்பு பேராயர் இல்லம், அறிவித்துள்ளது.
இவர் கைது செய்யப்பட்டதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது குற்றப் புலனாய்வு பொலிஸாரால் நடத்தப்பட்ட ஒரு சுயாதீன விசாரணை. இந்த விசாரணைகளை சுயாதீனமாக தொடர்ந்து நடத்த அனுமதிப்பது நல்லது என்றும் பேராயர் இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏனெனில் ---அநுர அரசாங்கமும் இதனை அரசியலாக்கி, தேசிய மக்கள் சக்திக்குரிய வாக்கு அரசியலாக மாற்றக் கூடும் என்ற சந்தேகம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்திடம் உண்டு.
அத்துடன் அரசியலாக்கப்பட்டால், இந்த விசாரணைகள் சீர்குலையும் எனவும் மல்கம் ரஞ்சித் கருதுகின்றார்.
அதாவது, கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது சில மாதங்கள் இது பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது நம்பிக்கை வைத்து பின்னர் ஏமாற்றமடைந்த நிலையில், அநுர அரசாங்கத்தின் மீதும் மீது நம்பிக்கை வைக்க முடியாது என பேராயர் மல்கம் ரஞ்சித் கருதுகின்றார் போலும்.
சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை இத் தாக்குதலுடன் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் சிலரும் மற்றும் பிள்ளையான் போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவதால், பெரியளவில் அக்கறை செலுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது.
அதாவது ---விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்கும் இறுதிப் போருக்கும், 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரையான சமாதான பேச்சுக் காலத்தில், புலிகளுக்கு எதிரான அல்லது புலிகள் மீது சர்வதேச மட்டத்தில் பழியை போடக் கூடிய முறையில் நன்கு திட்டமிடப்பட்ட பல தாக்குதல்கள் தமிழர் பிரதேசங்களில் இடம்பெறுவதற்கும் இக் குழுக்கள் மூளையாக இருந்தன.
இக் குழுக்களின் செயற்பாடுகளை சிங்கள அரசியல் தலைவர்கள் பலர், இலங்கைத் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் தன்மை உண்டு.
இக் காரண – காரியங்களினாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்ய இலங்கை அரச இயந்திரம் கால தாமதத்தை ஏற்படுத்தியிருந்தது எனலாம்.
தற்போது கொழும்பு பேராயரும் இதனை புரிந்துள்ள நிலையில், சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவிப்பை அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்டுள்ளார்.
ஆனாலும் ---ஈழத்தமிழர் விவகாரத்தில் கொழும்பை மையமாகக் கொண்ட கத்தோலிக்க திரு அவை தெளிவுடன் இல்லை. இது பற்றிய குற்றச்சாட்டுக்களை மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் இராஜப்பு ஜோசப் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விசாரணைகளின் இழுத்தடிப்பு அல்லது விருப்பம் இன்மைக்குரிய காரண காரியங்களை கொழும்பு பேராயர் இல்லம் தற்போது புரிந்து கொண்டாலும், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்குப் பொருத்தமான ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற பகிரங்க அறிவிப்பு எதையும் இதுவரை விடுக்கவில்லை.
வேண்டுமானால் ---இலங்கைத்தீவில் “மீள் நல்லிணக்கம்” என்று மாத்திரம் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் வடக்குக் கிழக்கில் போர்க் காலத்திலும், அதன் பின்னரான சூழலிலும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலைகள், பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள் பற்றியெல்லாம் கொழும்பு கத்தோலிக்க திரு அவை வாய் திறப்பதில்லை. .
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய சர்வதேச விசாரணைக்கு 2022 ஆம் ஆண்டு அழைப்பு விடுத்த பேராயர் மல்கம் ரஞ்சித், 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்ட போது, உள்ளக விவகாரத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டாம் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
அதாவது, ஈழத் தமிழர்கள் விவகாரத்தை உள்ளக விவகாரம் என்று பேராயர் அன்று கற்பிதம் செய்திருந்தார்.
இப் பின்புலத்திலேதான் ---பேராயருக்குத் தற்போது குறைந்தபட்ச ஞானம் ஏற்பட்டுள்ளது என்று கருதினாலும், 'மாற்றம்' - 'சோசலிசம்' என்று மார் தட்டிப் பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்கள் போன்று வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வரும் பௌத்த மயமாக்கல் பற்றியோ, காணி அபகரிப்புகள் தொடார்பாகவோ பகிரங்கமாக இதுவரை கண்டிக்கவில்லை.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை போன்று போர்க் குற்ற விசாரணைகளையும் நடத்த வேண்டும் என்று கூறுவதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் தயாராகவும் இல்லை என்பது தெரிகிறது.
அதேவேளை சுரேஷ் சாலே கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றொரு ஏமாற்று வேலை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இவர் போர்க்காலத்தில் உயர் இராணுவ அதிகாரியாகவும் பதவி வகித்திருந்தார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சரத் வீரசேகர, கத்தோலிக்க திரு அவையை ஏமாற்றவே சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் தங்களுக்குத் தெரியாது என்று பொலிஸார் தன்னிடம் கூறியதாகவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
சுரேஷ் சாலே, பிள்ளையான் போன்றோரை காப்பாற்ற வேண்டும் என்பது இவருடை பிரதான நோக்கம்.
சுரேஷ் சாலே என்ற உளவுத்துறை அதிகாரி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். 2019 ஜனவரி 3ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்தார்.
ஆகவே ---இப் பின்னணி கொண்ட சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டாலும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என எதிர்ப்பார்ப்பது கடினமானது என்ற கருத்துக்கள் இல்லாமலில்லை.
ஆகவே, ஈழத்தமிழர்களுக்கு 1920 இல் இருந்து இழைக்கப்பட்டு வரும் அரசியல் அநீதிகள் - இன அழிப்பு செயற்பாடுகள் பற்றிய முழுமையான சர்வதேச விசாரணை ஒன்றை கோரக் கூடிய பெரும் தகுதியும் துணிவும் கொழும்பு கத்தோலிக்க திரு அவைக்கு உண்டு என்ற அடிப்படையில், ”இலங்கை அரசு” என்ற கட்மைப்பை நோக்கிய சர்வதேச நீதி விசாரணைக்கு புதிய வியூகம் ஒன்றை பேராயர் மல்கம் ரஞ்சித் வகுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையர்கள் அதற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளனர் என்பதை மறுப்பதற்கும் இல்லை.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
Editor