அரச நிலங்களுக்கு இலவசக் காணி உரிமைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஜனாதிபதி

அரச நிலங்களுக்கு இலவசக் காணி உரிமைகள்

அரச நிலங்களுக்கு இலவசக் காணி உரிமைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஜனாதிபதி

அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் மானியங்களின் கீழ் காணிகளை அனுபவித்து வரும் மக்களுக்கு இலவசக் காணி உரிமைச் சான்றிதழ்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைத்தார் . 'ஹிமிகம' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் தொடக்க விழா வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் மானியங்களில் காணிகளை அனுபவித்து வரும் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு, அந்தக் காணிகள் மீதான முழு உரிமை இன்மையால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன . குறிப்பாக, பொருளாதார நடவடிக்கைகளுக்காகக் காணிகளைப் பயன்படுத்துவதில் இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது .

இந்நிலையில், கடந்த அரசாங்கத்தால் 'உறுமய' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இலவசக் காணி உரிமை வழங்கும் பணிகள், புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த உறுமய காணி உரிமைகளை வழங்குவதற்கும், எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டிய காணி உரிமைகள் தொடர்பான நிபந்தனைகளை மறு ஆய்வு செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஹிமிகம' வேலைத்திட்டத்தின் கீழ், காணி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் மானியங்களுடன் இணைக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் அகற்றப்பட்டு, 1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச நிலச் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கு அமைய முழு உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் . இதன் முதல் கட்டமாக அனுராதபுரம் மாவட்டத்தில் 500 இலவசக் காணி உரிமைச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன .

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நிலத்தை ஒரு பாரம்பரிய பொருளாதாரத்துடன் கட்டுப்படுத்துவது விஞ்ஞான ரீதியாகப் பொருந்தாது எனவும், நவீன தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார் . பெற்றோர் மற்றும் முன்னோர்களுடன் தொடர்புடைய ஒரு பந்தமாக நிலம் கருதப்படுவதாகவும், ஒவ்வொருவருக்கும் சொந்த நிலம் என்ற கனவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் .

எனினும், முழு உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர், மக்கள் தங்கள் நிலங்களை விற்பனை செய்யும் அபாயம் உள்ளதாக எச்சரித்த ஜனாதிபதி, பெறுபவர்கள் தங்கள் காணிகளைப் பாதுகாத்துத் தமது பிள்ளைகளுக்குக் கையளிக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார் . எதிர்காலச் சந்ததியினருக்காகவும் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காகவும் நிலத்தைப் பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார் .

இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது