ஜனாதிபதியின் மின்சார வாகன மின்னேற்றக் கூற்று அறிவியல் ரீதியில் தவறு

ஜனாதிபதியின் மின்சார வாகன மின்னேற்றக் கூற்று அறிவியல் ரீதியில் தவறு

ஜனாதிபதியின் மின்சார வாகன மின்னேற்றக் கூற்று அறிவியல் ரீதியில் தவறு

இரவில் மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதால் 300 மெகாவாட் கூடுதல் மின்சாரத் தேவை ஏற்படும் என்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கூற்று அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததும் முற்றிலும் தவறானதும் என்று சிரேஷ்ட தொழில்நுட்ப வல்லுநரும் எரிசக்தி நிபுணருமான டாக்டர் விதுர ரலபனாவா தெரிவித்துள்ளார்.

தெரனா தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட டாக்டர் ரலபனாவா, இலங்கையில் தற்போது புழக்கத்தில் உள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, உண்மையான கூடுதல் தேவை 100 மெகாவாட்டைக் கூட தாண்டாது என்று விளக்கினார்                                                        

300 மெகாவாட் தேவை ஏற்பட வேண்டுமானால், தற்போதுள்ளதை விட நான்கு மடங்கு மின்சார வாகனங்கள் நாட்டில் இருக்க வேண்டியதோடு, அவை அனைத்தும் ஒரே நேரத்தில் மின்னேற்றம் செய்யப்பட வேண்டிய அவசியமும் ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நவீன மின்சார வாகனங்கள் ஒரு முழு மின்னேற்றத்தில் 300 முதல் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியவை என்றும், எனவே அவை தினமும் மின்னேற்றம் செய்யப்படுவதில்லை என்றும், சராசரியாக ஐந்து நாட்களுக்கு ஒருமுறையே மின்னேற்றம் செய்யப்படுகின்றன என்றும் டாக்டர் ரலபனாவா குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துபவர் என்ற முறையில், அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்ற கருத்து தவறானது என்றும், ஒரு வாகனத்தை மின்னேற்றம் செய்வதற்கு ஆகும் குறைந்த நேரத்தைக் கருத்தில் கொள்ளும்போது பெரும் அழுத்தம் மின் கட்டமைப்புக்கு ஏற்படாது என்றும் உறுதியாகக் கூற முடியும் என்றார்.

ஜனாதிபதிக்கு இத்தகைய தவறான தரவுகளை வழங்குவதற்குப் பின்னால் புதைபடிவ எரிபொருள் ஊக்குவிப்பாளர்களே இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடு எரிசக்தியில் தன்னிறைவு அடைவதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், பேட்டரி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதும், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதும் அவசியம் என்று டாக்டர் விதுர ரலபனாவா வலியுறுத்தினார்.    

இது குறித்த செய்தியை Lanka C News உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளது