அமெரிக்க - ஈரான போர் நிறுத்தம் இந்திய அரசும் - இந்திய ஊடகங்களும்!!!
அமெரிக்க - ஈரான போர் நிறுத்தம். இந்திய அரசும்
*பாகிஸ்தான் ஒரு "தரகர் நாடு" (Broker Nation) என்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்...
*பாகிஸ்தான் ஒரு "தபால்காரர்" என்று சில ஊடகங்கள் கிண்டல்...
*போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் பாகிஸ்தான் பெயர் இல்லை.
*போர் நிறுத்தம் முறிய வேண்டும் என்ற தொனியில் இந்திய விமர்சகர்கள்...
அமெரிக்க - ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஏற்பாட்டாளராக செயற்படுகின்றமை தொடர்பாக, இந்தியாவின் பிரதான ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் கிண்டலாக உள்ளன.
நீண்டகால அரசியல் பகைமையின் காரணமாகச் சில ஊடகங்கள் கிண்டலடித்தாலும், ஒரு சில முன்னணி ஊடகங்கள் மாத்திரமே, போர் நிறுத்ததை எச்சரிக்கை - இராஜதந்திரம் என்ற ரீதியாக அணுக வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றன.
ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல எனவும், பாகிஸ்தான் நீண்டகாலமாகவே "தரகர்" (Brokerage) வேலைகளை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது பாகிஸ்தான் "தரகர் நாடு" (Broker Nation) என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (All Party Conference) கூறியிருக்கிறார்.
இந்தியா ஒரு தரகர் நாடாக இருக்க முடியாது என்று அக் கூட்டத்தில் ஜெய்சங்கர் கூறியதாக, ரைமஸ் ஒப் இந்தியா (Times of India) சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய வெளியுறவுக் கொள்கை தன்னாட்சி (Strategic Autonomy) அதிகாரம் கொண்டது எனவும், இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானைப் போலச் செயற்படாது என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக அச் செய்தி மேலும் கூறுகிறது.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சு, போர் நிறுத்தத்தை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் ஈடுபட்டது என்ற விபரங்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் என்ற பெயர் அந்த அறிக்கையில் இல்லை.
ஆகவே, போர் நிறுத்த ஏற்பாட்டின் ஊடாக, பாகிஸ்தான் இராஜதந்திர வெற்றியை பெற்றுள்ளது என்பதை, இந்தியா அங்கீகரிக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அத்துடன், அமைச்சர் ஜெய்சங்கரின் நாகரிகமற்ற, ஆனால் இராஜதந்திரமான கிண்டல் (Diplomatic Sarcasm) என்பதும் பட்டவர்த்தனம்
ஆனால், பாகிஸ்தானின் பங்களிப்பை அங்கீகரிக்க இந்திய அரசு தயங்குவதாக சில பிரதான இந்திய ஊடகங்கள் காரசாரமாக சுட்டிக்காட்டியுள்ளன.
ஆனால், வேறு சில இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விவாதங்கள், பாகிஸ்தான் ஒரு "தபால்காரர்" (Messenger) பணியை மாத்திரமே செய்வதாகக் கூறி கிண்டலடிக்கின்றன.
பாகிஸ்தான் எடுத்த முயற்சி இராஜதந்திர வெற்றி அல்ல எனவும், அந்த ஊடகங்கள், பாகிஸ்தான் மீதான தமது வன்மத்தை பகிரங்கப்படுத்துகின்றன.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி - பயங்கரவாதப் பின்னணி போன்றவற்றை முன்னிறுத்தி, "பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு எப்படி அமைதிப் பேச்சை நடத்த முடியும்?" என்ற கோணத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன.
இந்திய அரசியல் - இராணுவ ஆய்வாளர்கள் பலரும்
அமெரிக்க - ஈரான் போர் நிறுத்தம் முறிந்து, மீண்டும் போர் ஆரம்பிக்க வேண்டும் என்ற தொனியில் விவாத மேடைகளில் பேசுகின்றனர்.
அதேவேளை, அமெரிக்க அரசு, பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் வழங்குவது, இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை பாதிக்கும் என இந்தியா ரூடே (India Today) என்ற பிரதான ஊடகம் கடும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
ரைமஸ் நொவ் (Times Now) என்ற ஊடகம் இந்தியக் கௌரவத்துக்கு பாதிப்பு என்ற தொனியில் விமர்சிக்கிறது.
அதேநேரம், பாகிஸ்தான் உலக அரங்கில் முக்கிய ஏற்பாட்டாளராக மாறிவரும் போது, போர் நிறுத்த விவகாரத்தில், இந்தியா ஏன்க அமைதியாக உள்ளது என்ற கேள்வியை சில இந்திய விமர்சகர்கள் பேசுபொருளாக மாற்றியுள்ளனர்.
அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்
Editor