பயனர்களை அடிமையாக்கிய மெட்டா, கூகுளுக்கு 55 கோடி ரூபாய் அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்
இன்ஸ்டா, கூகுளுக்கு 55 கோடி ரூபாய் அபராதம்
அமெரிக்காவில், சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் (மெட்டா நிறுவனம்) மற்றும் யூடியூப் (கூகுள் நிறுவனம்) ஆகியவற்றின் வடிவமைப்பு, பயனர்களை வேண்டுமென்றே அடிமையாக்கும் வகையில் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய தீர்ப்பு ஒன்று பிறந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றத்தில், இளம்பெண் ஒருவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், “முடிவில்லா ஸ்க்ரோலிங்” (endless scrolling) மற்றும் “ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்த வீடியோ தானாக இயங்கும்” அம்சங்கள் பயனர்களை நீண்ட நேரம் தளங்களில் இருக்கத் தூண்டுவதாகவும், இதனால் தனது மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பயனர்கள் வெறுமனே வீடியோக்களால் ஈர்க்கப்படவில்லை என்பதையும், மாறாக தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்கை அம்சங்களே அடிமையாதலுக்கும் மனநலப் பாதிப்புக்கும் காரணம் என்பதையும் ஏற்றுக்கொண்டது. அத்துடன், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் 55 கோடி ரூபாய் (அமெரிக்க டாலரில் தோராயமாக 6.6 மில்லியன் டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, சமூக ஊடகங்களின் வடிவமைப்பு எவ்வாறு பயனர்களின் மனநலத்தைப் பாதிக்கும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாகவும், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தள அம்சங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது
Editor