விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு - சங்கீதா புகார்

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு - சங்கீதா புகார்

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு - சங்கீதா புகார்

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய் (மகன்) மற்றும் திவ்யா சாஷா (மகள்) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், மகள் திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததால் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி சங்கீதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு தற்போது செங்கல்பட்டு முதன்மை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மனுவில் சங்கீதா கூறியிருப்பதாவது:

தமது கணவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டிருப்பது தனக்கு 2021 ஏப்ரல் மாதம் தெரியவந்ததாக சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "திருமணத்துக்கு மீறிய அந்த உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தார். ஆனால், அவர் அந்த உறவை தொடர்ந்தார். இது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. செப்டம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடையில், வழக்கறிஞர் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

விஜய் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று, குறிப்பிட்ட அந்த நடிகையுடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அந்த நடிகை, தனது வெளியூர் பயணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இது எனக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும், அனைவரின் நற்பெயரையும் பாதுகாக்கும் விதமாகவும் தற்போது அந்த நடிகையின் பெயரை வெளியிடவில்லை" என மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவாகரத்து வழக்கு, நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் விஜயின் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது விளக்கம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது