இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் : IMF நிறைவேற்றுச் சபை மே 27 இல் தீர்மானம்!
இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் :
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை மதிப்பீடு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை வரும் மே 27ஆம் திகதி கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மீளாய்வுகள் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்டால், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் (SDR 508 மில்லியன்) நிதியுதவி விடுவிக்கப்படும்.
கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவிற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இந்த மீளாய்வுகள் தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாடு (Staff-Level Agreement) ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. இது நிறைவேற்றுச் சபை அங்கீகாரத்திற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், நிறைவேற்றுச் சபை கூட்டத்திற்கு முன்னதாக இலங்கை சில முக்கியமான முன் நிபந்தனைகளை (Prior Actions) பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று IMF தெரிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்யும் வகையிலான விலையிடலை (Cost-recovery pricing) மீள நிலைநிறுத்துதலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களை (Financing Assurances) உறுதிப்படுத்துதலும் அந்த முன் நிபந்தனைகளுள் முக்கியமானவையாகும்.
பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படையில் நோக்கும்போது, 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடைந்துள்ளது. மார்ச் மாத இறுதியில் பணவீக்கம் 2.2% ஆகப் பதிவாகியுள்ளது. உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி இருப்பும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இந்த நிலவரங்கள் சர்வதேச நாணய நிதியத்திக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளன என்று நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களும், மத்திய கிழக்கு நெருக்கடியால் உலகளாவிய எரிபொருள் விலை ஏற்றமும், புலம்பெயர் தொழிலாளர்களின் அன்னியச் செலாவணி மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன. இந்தச் சூழலிலும் சீர்திருத்தங்களில் இலங்கை அரசாங்கம் காட்டும் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியதம் பாராட்டியுள்ளது.
மே 27 கூட்டத்தில் மதிப்பீடு வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், 4 ஆண்டுகால மூன்று பில்லியன் டொலர் மதிப்பிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கை பெறும் மொத்த நிதியுதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Editor