நிலக்கரி தரக்குறைவு: நுகர்வோருக்கு சுமை இல்லை — ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உறுதி
நிலக்கரி தரக்குறைவு: நுகர்வோருக்கு சுமை இல்லை — ஜனாதிபதி
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரக்குறைவு மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அதனால் எந்தவித கூடுதல் கட்டணச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்பட மாட்டாது என்று .ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், உறுதியளித்தார்.
நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையம் மொத்தம் 900 மெகாவோட் உற்பத்தி திறன் கொண்டது. ஒவ்வொரு அலகும் 270 மெகாவோட் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரக்குறைவால் சில சந்தர்ப்பங்களில் 810 மெகாவோட் மட்டுமே உற்பத்தியாகிறது. இது இயந்திரக் கோளாறு அல்லது கொள்முதல் முறைகேடு அல்ல, மாறாக நிலக்கரியின் தரக்குறைவே காரணம் என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
நிலக்கரியின் தரம் ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. ஆரம்பக் கட்ட சோதனைகளுக்குப் பின் 80 சதவீத கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. எஞ்சிய 20 சதவீதம், 2023 முதல் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் சுயாதீன ஆய்வகத்தின் இறுதிப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே விடுவிக்கப்படுகிறது. இதுவரை மூன்று நிலக்கரி கப்பல்கள் இந்தப் பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளன.
தரம் குறைந்த நிலக்கரி வழங்கிய நிறுவனங்களுக்கு எதிராக கடும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இறுதி 20 சதவீத கொடுப்பனவு மட்டுமன்றி, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 80 சதவீத கொடுப்பனவிலும் ஒரு பகுதி மீளப் பெறப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 98 டொலராக நிர்ணயிக்கப்பட்ட நிலக்கரி கப்பலுக்கு, அபராதங்களுக்குப் பின் விலை 68 டொலராக குறைக்கப்பட்டுள்ளது.
தரக்குறைவான நிலக்கரியால் ஏற்படும் இழப்புகள் அனைத்தும் விநியோகஸ்தர் நிறுவனங்களிடமிருந்தே அறவிடப்படும் என்றும், அந்தச் சுமை ஒருபோதும் மின்சார நுகர்வோர் மீது சுமத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். தேவைப்படின் இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Editor