பிணை நிபந்தனை மீறல்: கபில சந்திரசேனவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பிணை-நிபந்தனை-மீறால்-கபில-சந்திரசேனவை-கைது உத்தரவு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கபில சந்திரசேனவின் பிணையை இரத்து செய்து, வழக்கு விசாரணை முடியும்வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஆராய்ந்ததையடுத்து, அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்வேஸுக்காக 06 ஏர்பஸ் A-330 விமானங்கள் மற்றும் 08 ஏர்பஸ் A-350 விமானங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான வழக்குடன் தொடர்புடையதாகும். இந்தப் பரிவர்த்தனையில் 02 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.