திமுகவின் மாடல் ஆட்சியில்" - 40,000 கோடி ஊழல் பட்டியலை வெளியிட்ட பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி

திமுகவின் மாடல் ஆட்சியில்" - 40,000 கோடி ஊழல்

திமுகவின் மாடல் ஆட்சியில்" - 40,000 கோடி ஊழல் பட்டியலை வெளியிட்ட பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மதுரை நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது" என புகழாரம் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (தேஜக) பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மதுரைக்கு வந்த பிரதமர் ,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவர் சிறப்பு தரிசனம் செய்தார்.

.பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, உரையாற்றிய  திருப்பரங்குன்றம் சென்று முருகனை தரிசனம் செய்தது தெய்வீகமான அனுபவமாக இருந்ததாகவும், தமிழ்நாட்டின் நல்வளர்ச்சிக்காக இறைவனிடம் வேண்டியதாகவும் தெரிவித்தார். அப்போது, முருக பக்தர் பூரண சந்திரன் உயிர் தியாகம் செய்தது குறித்து அறிந்து மனம் கனத்ததாகக் கூறிய அவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், அவரின் ஆத்மா சாந்தியடைய முருகனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். "திமுக அரசின் நியாயமற்ற போக்கினாலேயே இது நடந்திருப்பது வலியைத் தருகிறது. திமுக என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், இறுதியில் வாய்மையே வெல்லும். முருக பக்தர்கள் வெல்வார்கள்" என அவர் வலியுறுத்தினார்.

திமுக அரசை கடுமையாக விமர்சித்த பிரதமர், 2021-ல் திமுகவுக்கு மக்கள் அதிகாரம் அளித்தனர், ஆனால் அவர்கள் நல்லாட்சியை வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். "மாநிலத்தைக் கொள்ளையடித்தனர், பரம்பரை அரசியலை முன்னெடுத்தனர். எம்.ஜி.ஆருக்கு மதுரை மாநகரம் உற்ற துணையாக நின்றது, அதனால்தான் மதுரை திமுகவுக்கு வேப்பங்காயாக இருந்தது. சுத்தம், சுகாதாரத்தில் மதுரையை தரைமட்டமாக்கினர், ஊழல் காரணமாக மதுரை மேயர் பதவி துறந்தது - இதுதான் அவர்களின் மாடல்" என தாக்குதல் நடத்தினார்.

மேலும், திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறி பல்வேறு மோசடிகளை அவர் பட்டியலிட்டார்:பணியிட மாற்றத்தில் ரூ. 365 கோடி மோசடி அரசுப் பணிகளில் ரூ. 900 கோடி மோசடி ஒப்பந்தங்களில் ரூ. 1,000 கோடி மோசடி மணல் கொள்ளையில் ரூ. 4,200 கோடி மோசடி டாஸ்மாக்கில் ரூ. 40,000 கோடி மோசடி

தனது சமீபத்திய மலேசியப் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அங்கு மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டிருப்பதாகவும், திருவள்ளுவர் மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், "நாடாளுமன்றத்தில் செங்கோலுக்குப் பெருமிதமான இடம் கொடுத்து தமிழ் கலாச்சாரத்துக்கு மரியாதை அளித்தோம்" என்றும், "ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த காங்கிரஸ் ஆட்சிக்கு மாறாக, ஜல்லிக்கட்டை தொடர்வதற்கு நமது அரசுதான் அவசரச் சட்டம் பிறப்பித்தது" என்றும் கூறினார்.

"2014-க்கு முன் திமுக-காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, வேலைவாய்ப்பும் பொருளாதார வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் கூறினார். மதுரையில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். "பாம்பன் பாலத்தை மாற்றியமைப்பதில் நாங்கள் வேகம் காட்டினோம், இப்போது ரயில்கள் வேகமாகப் பயணிக்கின்றன" என்றும் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் நடக்கின்றன. மது மற்றும் போதைக்கு அடிமையாவதை வீட்டுப் பெண்கள் கவனித்து வருகின்றனர். அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை சிறப்பாக இருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவோம்" என உறுதியளித்தார்.

"திமுகவில் ஒருவர் 'என் மீது பயமில்லை' எனப் பேசியதாகக் கேள்விப்பட்டேன். ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. யாராவது என்னிடம் பயமில்லை எனச் சொல்வது, ஜனநாயக விழுமியங்களிடம் எனக்குள்ள அர்ப்பணிப்பை அவர்கள் பாராட்டுவதாகவே பொருள். தெரியாமல் எனக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிவிட்டார்கள்" என பிரதமர் பதிலடி கொடுத்தார்.

"காங்கிரஸிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு. அதனால்தான் காங்கிரஸ் வஞ்சம் தீர்த்துக் கொண்டு கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. அப்போது திமுக மெளனமாக இருந்தது" என்றும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

"தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கனவு காண்கிறார்கள், இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் அவர்களின் கனவு கானல் நீராகும். இத்தேர்தல் மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனை. திமுக வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வரும்" என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.