நிலக்கரி மோசடிச் சுமையை மின் நுகர்வோர் மீது சுமத்திய அரசு: சஜித் பிரேமதாச

நிலக்கரி மோசடிச் சுமையை மின் நுகர்வோர் மீது சுமத்திய அரசு

நிலக்கரி மோசடிச் சுமையை மின் நுகர்வோர் மீது சுமத்திய அரசு: சஜித் பிரேமதாச

 அரசாங்கம் மின்கட்டணத்தை மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளதாகவும், தவறான ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி மோசடியின் சுமையை நாட்டின் மின் நுகர்வோரின் தோள்களில் சுமத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,குற்றம்சாட்டினார்.

மின்கட்டணத் திருத்தம் தொடர்பாக இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், பின்வருமாறு தெரிவித்தார்:

"இந்த நிலக்கரி மோசடியின் சுமையை நாட்டின் மின் நுகர்வோர் மீது சுமத்த வேண்டாம் என்று கோரியிருந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் மின்கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்தும் முன்மொழிவை நடைமுறைப்படுத்தியுள்ளனர்."

மின்கட்டண உயர்வின் மூலம் வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து பணத்தைப் பறிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார். 180 அலகுகளுக்கு மேற்பட்ட மின் நுகர்விற்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள மின்கட்டணங்களால், உயர் நடுத்தர மக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளுக்கு மக்கள் சுமையைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டவர்களைப் பாதுகாத்து, அதன் பொருளாதார சுமையைச் சாமானிய மக்கள் மீது திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் வலியுறுத்தினார்.

மின் கட்டண உயர்வு உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும், நிலக்கரி மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.