லெராய் நிறுவனத் தலைமை அதிகாரியுடன் அமைச்சர் சந்திரசேகர் கலந்துரையாடல்
லெராய் நிறுவனத் தலைமை அதிகாரியுடன் கலந்துரையாடல்
உலகப் புகழ்பெற்ற கடல் உணவு, நீரியல் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தல் துறையில் முன்னணி நிறுவனமான லெராய் கடல் உணவுக் குழுமத்தின் (Lerøy Seafood Group) பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஹென்னிங் பெல்டெஸ்டாட் அவர்களை, நோர்வேயின் பேர்கன் நகரில் நடைபெற்று வரும் ஒன் ஓசியன் வீக் (One Ocean Week) சர்வதேச மாநாட்டில் வைத்து இலங்கையின் கடறொழில் மற்றும் நீரியல் வளத் துறை அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில், லெராய் நிறுவனத்தின் உலகளாவிய அனுபவங்கள், குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசியச் சந்தைகளில் அவர்கள் மேற்கொண்டு வரும் விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அத்துடன், இலங்கையின் கடற்றொழில் துறையின் தற்போதைய நிலை, அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் முதலீட்டுத் திறன்கள் குறித்தும் ஆழமாக விளக்கப்பட்டது.
மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இலங்கையின் மீன் பதப்படுத்தும் தொழில்துறையுடன் இணைந்து செயற்படுவதற்கான வலுவான ஆர்வத்தை லெராய் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வெளிப்படுத்தினார். மேலும், தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச சந்தை அணுகல் ஆகிய துறைகளில் இலங்கைக்கு நேரடி ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த முன்னேற்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதித் துறையைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் முக்கியத் தொடக்கப்புள்ளியாக அமையும் என்றும், இதன் மூலம் மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை உலகத் தரத்திற்கேற்ப மேம்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் உறுதியான நோக்கம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே. கஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Editor