அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி -பிரதமர் ஹரினி அமரசூரிய
அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி -
நாட்டில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், பொதுப் பயன்பாடுகள் மற்றும் கைத்தொழில்கள் தடையின்றி செயல்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய தொற்றுநோய், பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் சவால்களிலிருந்து நாடு மீண்டு வர முயற்சிக்கும் இக்கட்டான நிலையில், அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன என பிரதமர் குற்றம் சாட்டினார். ஜனநாயகத் தேர்தல்களின் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பதிலாக, அதிகாரத்தைப் பிடிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த கால தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் தவிர்க்கும் நோக்கத்திலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் விமர்சித்தார்.
தற்போதைய நெருக்கடி அரசாங்கத்தின் தோல்வியல்ல; மாறாக உலகளாவிய மோதல்களின், குறிப்பாக மத்திய கிழக்கு போர் தாக்கத்தின் விளைவாக உருவானது என பிரதமர் தெரிவித்தார். அந்த மோதல் ஆரம்பித்த பின்னர் குறுகிய காலத்திலேயே, எரிபொருள் விலை நிலைத்தன்மையை பராமரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தெற்காசியாவில் குறிப்பிடத்தக்கதாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்தும் நோக்கில் கியூ.ஆர். குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணவும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இக்கட்டான காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
Editor