அரசு தோல்விப் பயத்தாலேயே மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு
தோல்விப் பயத்தாலேயே மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய அரசு சுமார் 23 லட்சம் வாக்குகளை இழந்துள்ளதால், மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மேலும் பல லட்சம் வாக்குகளை இழக்க நேரிடுமென்ற அச்சத்தினாலேயே அரசு அத்தேர்தலை ஒத்திவைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
'மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அநுரவின் கோழைத்தனமான வெறியாட்டத்தை முறியடிப்போம்' எனும் தொனிப்பொருளில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றிய அவரே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
"இன்று மக்கள் மத்தியில் செல்ல அஞ்சும் ஜனாதிபதியும், கோழைத்தனமான, திறனற்ற அரசுமே ஆட்சியில் உள்ளன. ஆட்சிபொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து அச்சமடைந்த தற்போதைய அரசு, மாகாணசபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைத்து வருகிறது. மக்கள் தமது துயரங்களுக்கும் வேதனைகளுக்கும் வாக்குகள்மூலம் தக்க பதிலடி கொடுக்கத் தயாராகவுள்ளனர்.
நாட்டு மக்கள் இப்போதாவது பாடம் கற்க வேண்டும். எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மையோ மிகையான அதிகாரமோ வழங்கப்படக் கூடாது. இல்லையேல், அதிகார மமதையால் தன்னிச்சையான முடிவுகளுடன் தவறான ஆளுகை உருவாகிவிடும். நாட்டின் ஒரே மாற்றான ஐக்கிய மக்கள் சக்திக்கு சாதாரண பெரும்பான்மையே போதுமானது; எங்களுக்கு அபரிமித அதிகாரம் தேவையில்லை.
மக்களின் கஷ்டங்களை முதுகுத்தண்டாக்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று மக்கள் துயரங்களை மறந்து சுகபோகங்களில் மூழ்கியுள்ளது. உலகச் சந்தையில் விலைகள் குறைந்தபோதும், மின்கட்டணத்தை 33% குறைக்கவோ, இறக்குமதி விலையில் எரிபொருளை மக்களுக்கு வழங்கவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உலக நாடுகள் எரிபொருள் வரிகளைக் குறைத்து நிவாரணம் தரும்போது, இங்கு எதிர்மறையான நடவடிக்கைகளே நிகழ்கின்றன.
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசுக்கு அழுத்தமளிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 'தேசிய நடவடிக்கைக் குழு' ஒன்று அமைக்கப்படும். இதில் பதவி, தராதரங்கள் பாராது அனைவரும் இணைத்துக்கொள்ளப்பட்டு, மக்கள் உரிமைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
மாகாணசபைகள் பயனற்றவை என்போருக்கு அரசியல் நுணுக்கம் தெரியாது. மாகாணசபைகள் முறையாக இயங்கினால் சர்வதேச முதலீடுகளைக் கூட ஈர்த்துச் சிறப்பாகச் செயல்பட முடியும். நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதிகாரப் பகிர்வுக்கு மாகாணசபைகளே வழியமைத்தன.
'13+' எனவோ '13-' எனவோ நாங்கள் இரட்டை வேடம் போட மாட்டோம். சில அரசியல்வாதிகள் சர்வதேசத்தில் ஒரு கதையும், உள்நாட்டில் வேறு கதையுமாக மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி 13வது அரசமைப்புத் திருத்தத்தை அதில் உள்ளவாறே முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளது" என்றார்.
Editor