தையிட்டி பவானி வீதி விவகாரம்: தவிசாளருக்கு பொலிஸ் எச்சரிக்கை

தையிட்டி பவானி வீதி விவகாரம்: தவிசாளருக்கு பொலிஸ் எச்சரிக்கை

தையிட்டி பவானி வீதி விவகாரம்: தவிசாளருக்கு பொலிஸ் எச்சரிக்கை

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி வீதி” மீட்பு தொடர்பான நடவடிக்கையை நிறுத்துமாறு தவிசாளர் சோ. சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைந்துள்ளதாக கூறப்படும் விகாரை உள்ள இடத்திற்குள், பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி இருப்பதை தவிசாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை உறுதிப்படுத்த கடந்த 28ஆம் திகதி நில அளவையாளர்களின் உதவியுடன் வீதி அளவீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் வீதி விடுவிக்கப்பட வேண்டும் என விகாராதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 12ஆம் திகதி வேலி அகற்றப்படும் என்றும், அதற்கான செலவை விகாராதிபதி ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக விகாராதிபதி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, தவிசாளர் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அங்கு, வேலி அகற்றும் நடவடிக்கை இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அதை நிறுத்துமாறு எச்சரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலளித்த தவிசாளர் சோ. சுகிர்தன், இது பிரதேச சபையின் சொத்தாகும் என்பதற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் எனவும் தெரிவித்துள்ளார். தேவையானால் நீதிமன்றத்தில் இதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி காணி அளவீட்டின் போது, காணி விடுவிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதி வழங்கப்படாத காரணத்தால் உரிமையாளர்கள் அனுமதி வழங்க மறுத்ததால் அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டதாக யாழ் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.