புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசுக்கு – அமைச்சர் சந்திரசேகரம்"
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசுக்கு
தித்வா ‘Ditwa’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடறொழில் மற்றும் நீரியல் வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள், பழுது பார்க்கப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வழங்கி வைத்தார்
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட ‘Ditwa’ புயலின் தாக்கத்தால் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள பல மீனவர்கள் பெரும் சேதத்தை சந்தித்தனர். அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்து 865 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிவாரணத் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்குப் பதிலாக சீநோர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 11 புதிய படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், பகுதியளவில் சேதமடைந்த 14 படகுகள் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டன. அதோடு, புதிய மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களும் வழங்கப்பட்டன
இந்த உதவிகள் மூலம் மீனவர்கள் மீண்டும் தங்கள் தொழிலில் ஈடுபட்டு, தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். அவர்கள் எதிர்கொண்ட இழப்புகளை ஈடு செய்யும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது” என தெரிவித்தார்.நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் இக்காலகட்டத்திலும், மக்களை ஒருபோதும் புறக்கணிக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதே அரசின் முதன்மை நோக்கமாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபங்களை நோக்கமாகக் கொள்ளாமல், மக்களின் நலனையே மையமாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த காலங்களில் நிலவி வந்த ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள் அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்டு, அதனால் சேமிக்கப்படும் நிதிகள் மக்களின் நலத்திட்டங்களுக்கு மாற்றி பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
‘Ditwa’ போன்ற இயற்கை பேரழிவுகளையும், உலகளாவிய பொருளாதார சவால்களையும் கடந்து, நாட்டின் மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் பாதையில் அரசு உறுதியுடன் முன்னேறி வருவதாகவும் அமைச்சர் தனது உரையில் கூறினார்.
Editor