அமெரிக்க - ஈரான் போர் நிறுத்தமா? இந்தோ - பசுபிக் பிராந்தியம் இலக்கு!
அமெரிக்க - ஈரான் போர் நிறுத்தமா?
*இந்தியாவுடன் அமெரிக்கா உரையாடல்...
*அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி ஞாபகமூட்டிய இராஜதந்திரி...
*இலங்கை போர் பிராந்தியமாக மாறுமா? அநுர, சொல்வது என்ன?
ஈரான் மீதான போர் நிறுத்த அறிவிப்புகளுக்கு மத்தியில், தாக்குதல்கள் தொடருகின்றன. அதேநேரம், அமெரிக்கா, இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.
சீனாவுக்கு எதிரான இராணுவ கூட்டணிகள் இந்திய அரசை மையப்படுத்திய நிலையில், வோசிங்டனும் புதுடில்லியும் விரிவாக பேசி வருவதாக உயர்மட்ட இராஜதந்திர தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், சீனாவுக்கு எதிராக இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்தி 2017 இல் உருவாக்கப்பட்ட குவாட் (Quad) இராணுவ கட்டமைப்பு தொடர்பாக பேசியதாக எதுவும் கூறப்படவில்லை.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய செயற்பாடுகள் தொடர்பாக சென்ற பெப்ரவரி மாதம் ட்ரம்ப் - மோடி ஆகிய இருவரும் ஆராய்ந்தனர்.
தற்போது ஈரான் மீதான தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் வோசிங்டன் - புதுடில்லி நடத்தும் இராஜதந்திர உரையாடல் நிதானமாக நகருவதாக கர்நீகின்டவுன்மென்ற (carnegieendowment) என்ற ஆங்கில ஊடகம் வியாழக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் செய்யப்பட்ட அமெரிக்க - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு ஆரம்பம் எனவும், அதன் மேலதிக செயற்பாடுகள் பற்றி மேலும் பேச வேண்டிய தேவை இருப்பதாகவும் அச்செய்தி விபரிக்கிறது.
2025 - 2035 கால கட்டத்திற்கான பத்து ஆண்டு கால பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Defence Framework Agreement) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.
கோலாலம்பூரில் கைச்சாத்தான இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள், ஈரான் போருக்கு மத்தியில் இந்தியாவுடன் தொடர்ந்து பேச அமெரிக்கா விரும்பியுள்ளது என புதுடில்லி ஊடகங்கள் கூறுகின்றன.
சீன எதிர்ப்பு / பிராந்திய பாதுகாப்பு சீன இராணுவ நகர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தோ-பசுபிக் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது முக்கியமானது என்ற தொனியை மோடியிடம் ட்ரம்ப் வெளியிட்டதாகவும் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.
வோசிங்கடன் - புதுடில்லி தத்தமது இராஜதந்திர நகர்வுகளை நிதானமாக மேற்கொள்வதாக கூறினாலும். இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பை அமெரிக்கா நேரடியாக எதிர்பார்ப்பதாகவும் புதுடில்லி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேநேரம், முன்னைய பாதுகாப்பு ஒப்பந்தங்களின் பிரகாரம் போர் விமானங்கள் இந்திய துறைமுகங்களில் தரையிறங்க இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என ட்ரம்ப் மோடிக்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில். அமெரிக்க - ஆபிரிக்க கண்டங்களுக்கு இடையே உள்ள அத்திலாந்திக் பெருங்கடல் பகுதிகளில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் ஊடுருவுகின்றமை பற்றிய தகவல்கள் குறித்து ரைம்ஸ் ஒப் இந்தியா (timesofindia) செய்தி ஊடகம் சென்ற வியாழக்கிழமை விமர்சித்துள்ளது.
இந்தோ - பசுபிக் கடல் பகுதிகளிலும் சீன நீர்மூழ்கி கப்பல்கள் மிகச் சமீபத்திய நாட்களில் ஊடுருவியுள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் கூறுகிறது.
அதேவேளை, அமெரிக்க போர் விமானம் இலங்கையில் தரையிறங்க அனுமதி கோரிய போது, அதை மறுத்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
ஆனால், அது ஒரு ஆரம்ப அனுமதி கோரல் எனவும், தேவை ஏற்பட்டால். இலங்கைத் துறைமுகங்கள் - விமான நிலையங்கள் பயன்படுத்தப்படும் என, அமெரிக்கா இலங்கைக்குக் கூறியதாகவும் கொழும்பு உயர்மட்ட உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தெற்கு - மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் (Sergio Gor) சென்ற 19 ஆம் திகதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை கொழும்பில் சந்தித்து உரையாடிய போது, இலங்கையுடன் செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி ஞாபகமூட்டியதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பின்னணியில் தான், அமெரிக்க அரச கூட்டுத் திட்டத்தின் (State Partnership Program - SPP) கீழ் இலங்கையுடன் கைச்சாத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கையை போர்ப் பிராந்தியமாக மாற்றாது என அநுர அரசாங்கம் 26 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவித்தது போலும்.இலங்கையின் இந்த அறிவிப்பை பிபிசி ஆங்கில செய்தி சேவை 26 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

ஆகவே, இலங்கைத்தீவு மக்கள் குழப்பமடையாத வகையில், ஒரு சமாளிப்புக்காக ”இலங்கை போர் பிராந்தியமாக மாறாது” என்ற தகவலை இலங்கை வெளியிட்டிருக்கலாம்.
ஆனாலும் இந்தியாவைக் கடந்து இலங்கையின் துறைமுகங்கள் - விமான நிலையங்கள் போன்றவற்றை அமெரிக்கா பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்ற நம்பிக்கை சிங்கள அரசியல் தலைவர்களிடம் உண்டு.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கடல்சார் பாதுகாப்பை பிரதான நோக்கமாகக் கொண்டது.
ஆகவே, இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை துறைமுகம் அல்லது இலங்கையை தளமாக அமெரிக்கா பயன்படுத்தக்கூடிய ஆபத்துகள் இருப்பதாக தெரிகிறது.
இப்பின்னணியில், இந்திய - இலங்கையை மையப்படுத்திய இந்தோ- பசுபிக் பிராந்திய விவகார பாதுகாப்பு ஏற்பாடுகளை நோக்கமாகக் கொண்டே, ஈரான் மீதான தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருக்கலாம் என்ற தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.
இப் போர் நிறுத்த அறிவிப்பை பயன்படுத்தி அமெரிக்கா, அடுத்த போருக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஈரானிய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அடுத்த கட்ட போருக்கான ஒத்திகையாக போர் நிறுத்தம் அமையலாம் என ஈரான் அரசும் எதிர்பார்க்கிறது.
ஏனெனில், ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா எதிர்பார்த்தது போன்று எதுவும் அமையவில்லை.
ஆனாலும், அந்த நீரிணை அமெரிக்க கட்டுப்பாட்டில் அல்லது ஈரான் அரசுடன் இணைந்து அதனை செயற்படுத்தும் நோக்கம் அமெரிக்காவுக்கு உண்டு என்பதை டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய நகர்வுகள் - பேச்சுகள் காண்பிக்கின்றன.
இப்போரில் அமெரிக்கா இஸ்ரேல் அரசுடன் இணைந்து இயங்கினாலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா - கனடா போன்ற மேற்கு நாடுகள் அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க மறுக்கின்றன.
இப்பின்னணியில் தான் தற்போது வளைகுடா நாடுகள், ஈரான் அரசுக்கு அவை எச்சரிக்கை விடுத்துள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை அந்நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் ஈரான் மீது இராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கப்படும் என்று, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் ஆகிய ஆறு நாடுகள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அல்ஜசீரா (al jazeera) ஊடகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஹார்மூஸ் நீருக்கடியில் மறைமுகமான அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது. ஈரானின் அதிவேக படகுகள் மற்றும் நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை இலக்கு வைத்து ஹார்மூஸ் நீரிணையில், அமெரிக்கா, தனது A-10 தண்டர்போல்ட் II (A-10 Thunderbolt II)
தாக்குதல் விமானங்களையும் மற்றும் AH-64E அப்பாச்சி (Apache) போர் ஹெலிகொப்டர்களையும் நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக போர் மேலும் நீடிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக ஐ.ஆர்.ஐ.பி (Islamic Republic of Iran Broadcasting -IRIB) என்ற ஈரான் அரச ஊடகம் அச்சம் வெளியிட்டுள்ளது.
ஹார்மூஸ் நீரிணை வழியாக அமெரிக்க மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் தவிர்ந்த ஏனைய கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர ஈரான் அனுமதி வழங்கிய நிலையில், அமெரிக்காவின் இந்த அச்சறுத்தல், போரை மேலும் நீடிக்கும் என அக்சியோஸ் (axios) செய்தித் தளமும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானின் அதிவேக படகுகள் மற்றும் நிலத்தடி ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்து. அமெரிக்கா செயற்படுவதாகவும், நீருக்கடியில் பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கும் ஈரானின் நீர்மூழ்கிக் கப்பல்களினால் மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மோதலின் மையப்புள்ளியாக ஈரானின் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை விட மிகவும் சிறியவை. சுமார் 29 மீட்டர் நீளமும், 120 டன் எடையும் கொண்டவை.
இவற்றின் சிறிய வடிவம், 30 மீட்டர் போன்ற ஆழமற்ற நீரிலும் இயங்கக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈரானிடம் இதுபோன்ற நீர்மூழ்கி கப்பல்கள் 10 உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரானின் இந்த சிறிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவிடம் உள்ள ஓஹியோ-வகுப்பு (Ohio-class) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 18,750 டன் எடையும், 170 மீட்டர் நீளமும் கொண்டது.
இப்போது ஹர்மூஸ் நீரிணைக்கு அடியில் அமெரிக்க - ஈரான் நீர்மூழ்கி கப்பல் மோதல்கள் ஆரம்பிக்கப்பட கூடிய வாய்ப்புகள் அதிமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரித்துள்ளன.
அதேநேரம், அதிக தூரத்திற்கு அதாவது, ஹார்மூஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடா முழுவதும் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய குரூஸ் ஏவுகணைகளை (Cruise Missiles) ஈரான் உருவாக்கியுள்ளது.
இந்த ஏவுகணை 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேநேரம், ஈரானுக்கு சீனா நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை சீன ஊடகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான அல்லது நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், ஈரானுக்கு சீனா வான் பாதுகாப்பு அமைப்புகள் (HQ-16, HQ-17AE) மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் வழங்கியதாக அக்சியோஸ் (axios) செய்தி நிறுவனம் கூறுகிறது.
போர் ஆரம்பிக்கும் முன்னர், ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது என்ற தகவல்களை சீன அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஆனாலும் சீன செயற்கைக்கோள்கள் மூலம், வளைகுடா பிரதேசங்களில் அமெரிக்கப் போர்க் கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணித்து, ஈரான் படைகளுக்குத் தகவல்களை சீனா வழங்கி உதவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஈரானுக்கு சீனாவின் இராணுவ ஒத்துழைப்பு நேரடியாக இல்லை. ஆனாலும் உளவுப் பரிமாற்றங்கள் மற்றும் போர் தளபாட விநியோகங்கள் தொடர்வதாக நியூஸ் வீக் (newsweek) செய்தித் தளம் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது.
அதேநேரம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா 5 ஆயிரம் படைகளை அனுப்பவுள்ளதாக அக்சியோ செய்தி தளம் தெரிவிக்கிறது. அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியாகிய இச்செய்தியில் பிராந்திய பதற்றம் தெரிகிறது.
ஆனால், நீர்மூழ்கிக் கப்பல் போர் செயற்பாடுகளில் வரலாற்று ரீதியான ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க கடற்படைக்கு சவாலாக, சீனாவின் சமீபகால நீர்மூழ்கிக் கப்பல் ஆராய்ச்சியும் செயற்பாடும் அமைந்துள்ளன.
இதனை அமெரிக்கா நேரடியாக ஏற்கும் மனநிலையில் இல்லை.
ஆனாலும் போரில், நேரடியாகவோ மறைமுகமாகவோ சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒத்துழைப்பு, ஈரானுக்கு கிடைக்குமானால், அது அமெரிக்கா என்ற ”முதன்மை வல்லரசுக்கு” பேராபத்து என்பதை எந்தவொரு ஆய்வாளரும் மறுக்க வாய்ப்பில்லை.
அ.நிக்ஸன்-பத்திாிகையாளா்
Editor