காலி கடலில் ஈரானிய போர்க்கப்பல் அவசர உதவி கோரியது: 180 பேர் மீட்பு
காலி கடலில் ஈரானிய போர்க்கப்பல்
ஈரான் கடற்படையின் தெற்கு கடற்படையைச் சேர்ந்த 'ஐரிஸ் தேனா' (IRIS Dena) என்ற ஈரானியப் போர்க்கப்பல், இலங்கைத் தீவின் காலி கடலில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் நின்று உதவி கோரியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையும் இலங்கை விமானப்படையும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டன. கப்பலில் இருந்த 180 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பணியாளர்களில் 30 பேர் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கப்பலின் மூத்த அதிகாரி ஒருவர் அவசர அழைப்பை ஏற்படுத்தி உதவி கோரியதையடுத்தே, கப்பலை பாதுகாப்பாக மீட்க முடிந்ததாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
இது மனிதாபிமானப் பணி எனவும், இலங்கைக் கடற்பரப்புக்குள் நின்று உதவி கோரியதால் கப்பலையும் அதன் பணியாளர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது கொழும்பில் உள்ள ஈரான் தூதுவரும் தூதரக அதிகாரிகளும் இலங்கை வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளனர். கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு தூதரக அதிகாரிகள் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1979 ஆம் ஆண்டின் சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மாநாட்டில் (International Convention on Maritime Search and Rescue) இலங்கை கையெழுத்திட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.